அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆலோசனை
தூத்துக்குடி, ஜூலை 23: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடி மாநகராட்சியில் நடந்துவரும் அனைத்து வளர்ச்சித்திட்டப்பணிகளையும் விரைவில் முடிப்பது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்குத் தலைமை வகித்த மேயர் ஜெகன்பெரியசாமி பேசுகையில் ‘‘ தூத்துக்குடி மாநகர பகுதிகளில் புதிதாக 954 சாலைகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். ஏற்கனவே நடைபெற்று வரும் சாலை பணிகளையும், குடிநீர் குழாய் பதித்தல், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளையும் 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
முதற்கட்டமாக 10 வார்டுகளில் 24 மணி நேர குடிநீர் வழங்கும் பணியை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சண்முகபுரம், போல்டன்புரம், லெவஞ்சிபுரம், டூவிபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் முடிந்து தற்போது புளூ பைப்லைன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வி.வி.டி. பூங்கா மற்றும் குரூஸ்புரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் இன்னும் புளூ பைப்லைன் அமைக்கும் பணிகள் நிறைவடையவில்லை. மாநகராட்சி பகுதிகளில் புளூலைன் பதிப்பதற்காகவும், பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட உள்ள சாலைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை செவ்வனே மேற்கொள்ள அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்றார்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பானோத் ம்ருகேந்தர் லால், மாநகராட்சி முதன்மை பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவிப் பொறியாளர்கள் முனீர் அகமது, ராஜேஷ்கண்ணா, இளநிலைப் பொறியாளர்கள் துர்காதேவி, அமல்ராஜ், லெனின், பாண்டி மற்றும் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.