மணலி புதுநகரில் 10 ஆண்டாக கிடப்பில் குடிநீர் திட்ட பணிகள்: விரைந்து முடிக்க கோரிக்கை
திருவொற்றியூர்: மணலி மண்டலம் 15, 16 ஆகிய வார்டுகளை உள்ளடக்கி மணலி புதுநகர், சடையன்குப்பம், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் மாநகராட்சி சார்பில் பொது குழாய்கள் மற்றும் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியில் வீட்டு இணைப்பு குழாய் மூலம் தடையின்றி குடிநீர் விநியோகிக்கும் வகையில், கடந்த 2014ம் ஆண்டு ரூ.80 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் கொண்டுவரப்பட்டு பணிகள் தொடங்கியது.
அதன்படி பல்வேறு இடங்களில் பள்ளம் தோண்டி குழாய்களும் பதிக்கப்பட்டன. ஆனால் சுமார் 50 சதவீத பணிகள் நடைபெற்ற நிலையில் பல்வேறு காரணங்களால் மீதமுள்ள பணிகள் தடைப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த குடிநீர் திட்ட பணிகள் முடிவடையாமல் கிடப்பில் உள்ளது. இதனிடையே குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு மீண்டும் சாலை போடாமல் கிடப்பில் விட்டதால் சாலைகள் குண்டும், குழியுமாகி பொதுமக்கள் நடந்த செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் திட்ட பணி நடைபெற்ற சாலைகளை குடிநீர் வழங்கல் வாரிய பொறியியல் பிரிவிடம் ஒப்படைக்காததால் சாலை போட முடியவில்லை எனக் கூறி மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 10 வருடங்களாக சாலை போடாமல் அப்படியே கிடப்பில் வைத்துள்ளனர். இதனால் சைக்கிள் மற்றும் மோட்டார் பைக்கில் செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் குண்டும் குழியுமான சாலையில் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே விரைவாக குடிநீர் திட்ட பணியை முடித்து இங்கு சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த அதிமுக ஆட்சியில் குடிநீர் திட்ட பணியை தகுதியான ஒப்பந்ததாரருக்கு கொடுக்காததால் திட்ட பணியை முழுமையாக முடிக்காமல் 10 வருடங்களாக கிடப்பில் உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது பாதாள சாக்கடை திட்ட பணிகளும் நடைபெறுவதால் மணலி புதுநகர் மற்றும் அதை சுற்றி உள்ள அனைத்து தெருக்களும் சாலைகள் குண்டும் குழியுமாகி பொதுமக்கள் நடக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக முடித்து மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.