வீட்டின் பூட்டை உடைத்து 58 பவுன் தங்க நகையை கொள்ளையடித்தவர் கைது
மானாமதுரை, ஜூலை 20: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட ரயில்வே காலனி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மருது மகன் முத்து (48). கடந்த 4ம் தேதி இவர் வீட்டின் கதவை உடைத்து 58 பவுன் நகைகள், 500 கிராம் வெள்ளி கொலுசுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரில் மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை எம்.கரிசல்குளம் சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த நபரிடம் விசாரித்தபோது, சுமார் 33 பவுன் நகைகளை கைலிக்குள் மறைத்து வைத்திருந்தார். விசாரணையில், சிவகங்கை கீழ்க்குளம் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் கலையரசன் (42) என்பதும், முத்து வீட்டில் நகையை கலையரசன், சந்தனமகாலிங்கம், செல்வி, விஜய் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மூவரையும் தேடி வருகின்றனர்.