கொய்யா செடிகளில் நோய் தாக்குதலை தடுக்க கவாத்து செய்ய வேண்டும்: தோட்டக்கலைத்துறை அட்வைஸ்
மதுரை, அக். 31: கொய்யா செடிகளில் நோய் தாக்குதலை தடுக்க கவாத்து செய்ய வேண்டுமென, தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் தோட்டக்கலை பயிர்கள் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளன. இவற்றில் கொய்யா, மா, நெல்லி, எலுமிச்சை, போன்றவை தனிப்பயிர்களாக பயிரிடப்பட்டுள்ளன. பருவமழை துவங்கி உள்ள நிலையில், இச்சாகுபடியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை காலங்களில் கொய்யா உள்ளிட்ட தோட்டக்கலை மரங்களை, விவசாயிகள் முறையாக கவாத்து செய்ய வேண்டும். சிறிய செடிகள் காற்றின் வேகத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, அவற்றின் அருகே குச்சிகளால் கட்டி இணைப்பு கொடுக்க வேண்டும். பூஞ்சாண நோய்களை தடுக்க நோய்த்தடுப்பு மருந்துகளை உரிய நேரங்களில் தெளிக்க வேண்டும். விளைநிலங்களில் உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தாங்கு செடிகளில் நிழலை ஒழுங்குபடுத்த கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து, தண்டுப்பகுதியில் அதனை குவித்து வைக்கலாம். இவ்வாறு கூறினர்.
