வாடிப்பட்டி-சிட்டம்பட்டி வெளிவட்ட சாலை திட்டம்: பிப்ரவரியில் பயன்பாட்டுக்கு வருமென எதிர்பார்ப்பு
மதுரை, நவ. 25: வாடிப்பட்டி-வெளிவட்ட சாலை திட்டத்தின் முதற்கட்ட பணிகள் பிப்ரவரியில முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமென தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, உத்தங்குடி-கப்பலூர் இடையிலான ரிங்ரோடு, 1997ல் உருவாக்கப்பட்டு, 2019ல் உலக வங்கி நிதி உதவியுடன் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இச்சாலை அமைக்கப்பட்ட பின் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள், தென் மாவட்டங்களுக்கு ரிங்ரோடு வழியாக சென்று வருகின்றன.
அதே நேரம், நகர் வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சிக்கேற்ப மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மதுரை-கன்னியாகுமரி சாலையை இணைக்கும் விதமாக, வெளிவட்ட சாலை அமைக்கும் பணிகள் ரூ.900 கோடியில் நடக்கின்றன. மதுரை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாடிப்பட்டியிலிருந்து மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிட்டம்பட்டி வரை 30 கி.மீ, தூரத்திற்கு இப்பணிகள் நடக்கின்றன. இதில், வாடிப்பட்டி அடுத்த வகுத்தமலை அருகே வனவிலங்குகள் சாலையை கடக்க 60 மீ, அகலம், 20 மீ, நீளத்தில் ‘அனிமல் ஓவர் பாஸ்’ பாலம் கட்டும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
ஒட்டுமொத்த திட்டத்தில் 90 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், சிட்டம்பட்டி மற்றும் வாடிபட்டி ஆகிய இரு இடங்களில் சென்னையில் உள்ள கத்திபாரா மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ளது போல் ‘பட்டர்பிளை’ வடிவில் 10 மீட்டர் அலகம் 110 மீட்டர் விட்டத்தில் அணுகுசாலை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனால், வெளிவட்ட சாலையின் முதற்கட்ட திட்டம் பிப்ரவரி அல்லது மார்ச் முதல்வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் எனவும், நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.