உழவர் நல சேவை மையம் திட்டம்
உசிலம்பட்டி, செப். 25: உசிலம்பட்டியை அடுத்த செல்லம்பட்டி வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக வேளாண் உதவி இயக்குனர் செல்வராஜ் தெரிவித்துள்ளார. இதுகுறித்த அவரது அறிக்கை: வேளாண்மையில் பட்டம், பட்டய படிப்புகளை முடித்தவர்கள், சுயதொழில் துவங்கும் வகையில், உழவர் நல சேவை மையம் அமைக்கப்படுகிறது.
இதன் மூலம் தரமான விதைகள், இயற்கை இடுபொருள்கள், கால்நடை தீவனங்கள், நியாயமான விலையில் விற்பதோடு, அனைத்து ஆலோசனையும் வழங்கப்படும். எனவே 20 முதல் 45 வயது வரையிலானவர்கள் ஆதார், கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, நிரந்தர வங்கிக் கணக்கு, பான் கார்டு, வங்கியில் பெறப்பட்ட விரிவான திட்ட அறிக்கையுடன் நேரில் தொடர்பு கொள்ளலாம். இத்திட்டத்தில் ரூ.10 லட்சத்தில் தொழில் தொடங்கினால், அரசு தரப்பில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.