தனிப்படையினர் சோதனையில் ரயில்களில் கடத்தி வந்த 16 கிலோ கஞ்சா சிக்கியது
மதுரை, அக். 24: மதுரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் தனிப்படையினர் நடத்திய அதிரடி சோதனை வாயிலாக ரயில்களில் கடத்திய 16 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதலானது. ரயில்களில் கஞ்சா கடத்தலை தடுக்க, மாவட்ட எஸ்பி அறுவுறுத்தலின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. இதன்படி இன்ஸ்பெக்டர் கண்ணத்தாள் தலைமையிலான தனிப்படையினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் மதுரை ரயில் நிலையம் வந்தனர்.
அங்கு மேற்கு வங்கம், புருளியாவிலிருந்து தென்காசி சென்ற வாராந்திர ரயிலில், முன்பதிவு இல்லாத பயணிகள் பெட்டியில் சோதனை செய்தனர். இதில், கேட்பாரற்று கிடந்த பேக்கில் 4 பார்சல்களில் மொத்தம் 7.750 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இதே ரயிலில் பயணித்த பீகாரைச் சேர்ந்த ஸ்ரீசான்ராம்(40) என்பவரிடம் 5.600 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.
இதேபோல் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான தனிப்படையினர் குருவாயூர் வாராந்திர ரயிலில், முன்பதிவில்லாத பயணிகள் பெட்டியில் நடத்திய சோதனையில் 2 பார்சல்களில் மொத்தம் 3 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, கஞ்சா கடத்தியவர்களை தேடி வருகின்றனர்.