கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம்
மதுரை. நவ. 22: இணைய வழி உட்பிரிவு பட்டா மாறுதலில் உள்ள, பணி குறியீட்டினை குறைத்திட வேண்டும். நில அளவைக்கு ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற தனியார் அளவர்களை நியமிப்பதை கைவிட வேண்டும். நில அளவர்களாக, ஒருமுறை தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீள தரம் உயர்த்தி வழங்க வேண்டும். குறுவட்ட அளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும். நில அளவை, நில பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகளுக்கான பணிகளை மேற்கொள்வதால் குறுவட்ட அளவர் முதல் வட்டத் துணை ஆய்வாளர்கள் வரை நீதிமன்ற நடைமுறைகளுக்கான பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 18ம் தேதி முதல் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நில அளவையர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.