திருநங்கையை தாக்கிய இருவர் கைது
பேரையூர், நவ. 19: பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள தேவன்குறிச்சி சேர்ந்தவர் வீரலட்சுமி (24). இவர் திருநங்கை. இந்நிலையில் வீரலட்சுமியின் தம்பி வன்னிவேலம்பட்டியைச் சேர்ந்த அழகர் (எ) புலுக்கர் (22) என்பவரின் டூவீலரை இரவல் வாங்கி ஓட்டிச் சென்றபோது, தவறி விழுந்து விபத்தானதில் டூவீலர் சேதமாகியுள்ளது.
இதற்கான பணத்தை கொடுப்பதாக ஒப்புக் கொண்டதில் ஏற்பட்ட தகராறில் நேற்று திருநங்கை வீரலட்சுமியை அழகர் (எ) புலுக்கர் மற்றும் வன்னிவேலம்பட்டியைச் சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க வாலிபர், மதுரைவீரன் (21), சமையமணி (20), ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இது குறித்து திருநங்கை வீரலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகர் (எ) புலுக்கர், 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மதுரை வீரன், சமையமணி, ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.