ஆயுதங்களுடன் மக்களை மிரட்டிய அண்ணன், தம்பி உள்பட 3 வாலிபர்கள் கைது
மதுரை, நவ. 18: மதுரையில், சாலையில் செல்லும் பொதுமக்களை ஆயுதங்களை காட்டி மிரட்டிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக், வாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை, தெற்குவாசல் போலீஸ் எஸ்ஐ கோடீஸ்வர மருது தலைமையில் ஏட்டுகள் நாகேந்திரன், இளையராஜா ஆகியோர் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காமராஜர்புரம், முனிச்சாலை பகுதியில் ஒரு பைக்கில் வந்த 3 வாலிபர்கள் ஆயுதங்களை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து ெசன்றனர். அப்போது திருமலை நாயக்கர் மகால் பகுதியில் நடுரோட்டில் நின்றிருந்த வாலிபர்கள் கைகளில் பெரிய வாள்களை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சப்படுத்தும் வகையில் மிரட்டிக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, பைக், ஆயுதங்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினர். அவர்களில் ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் காமராஜர்புரத்தை சேர்ந்த ஆல்வின்(22) என்பது தெரியவந்தது. மேலும் தப்பி ஓடியவர்களில் ஒருவர் ஆல்வினின் அண்ணன் ஆல்பர்ட்(24), மற்றொருவர் சகாயரூபன்(28) என்றும் தெரிந்தது. அவர்களையும் ேபாலீசார் மடக்கினர். அவர்கள் விட்டுச்சென்ற வாள்கள், டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.