கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை
மதுரை, அக். 17: கொலை வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கள்ளிக்குடி அருகேயுள்ள புளியம்பட்டியைச் சேர்ந்தவர் ராமராஜ் (65). இதே ஊரைச் சேர்ந்தவர் செல்வகண்ணன். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 16.5.2021ல் தகராறு ஏற்பட்டுள்ளது. அன்றிரவு புளியம்பட்டி பொது மந்தையில் தூங்கி கொண்டிருந்த செல்வக்கண்ணன் தலையில் ராமராஜ் கல்லைத் தூக்கிப் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இந்த படுகொலை குறித்து வழக்குப்பதிவு செய்த வில்லூர் போலீசார், ராமராஜை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ஜோசப்ஜாய் நேற்று தீர்ப்பளித்தார். அதில், ராமராஜ் மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.