மதுரையில் 16 வார்டுகளுக்கு பாதாளச்சாக்கடை இணைப்பு வழங்கும் சிறப்பு முகாம் நாளை துவங்கி 3 நாட்கள் நடக்கிறது
மதுரை, அக். 14: மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை வடகரையில் அமைந்துள்ள 16 வார்டுகளில் உள்ள சுமார் 43,211 கட்டிடங்களுக்கு புதிய பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைப்பு பெற்றவர்கள் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு பெறாதவர்கள் மாநகராட்சியின் சார்பில் நடைபெறும் சிறப்பு முகாமில் தங்களது வீடுகளில் இணைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்திற்கு வைப்புத் தொகை மற்றும் பராமரிப்பு கட்டணம் செலுத்தி கணினியில் பதிவேற்றம் செய்து அனுமதி ஆணை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக அக்.15ம் தேதி (நாளை) முதல் அக்.17ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதன்படி 36, 37 வார்டுகளுக்கு கோமதிபுரம் வார்டு அலுவலகம், 3, 17, 18 வார்டுகளுக்கு ஆனையூர் வார்டு அலுவலகத்தில் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது. நாளை மறுநாள் (அக்.16) 5, 6, 7 வார்டுகளுக்கு சர்வேயர் காலனியில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகம், 38, 39, 40 வார்டுகளுக்கு வண்டியூர் வார்டு அலுவலகததிலும், அக்.17ம் தேதி 4, 19 வார்டுகளுக்கு ஆனையூர் வார்டு அலுவலகம், 8, 11, 13 வார்டுகளுக்கு கிழக்கு மண்டல அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. கிழக்கு மண்டல பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சில வார்டுகளில் நடைபெறும் பணிகள் முடிக்கப்பட்ட பின்பு, பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும். எனவே புதிய பாதாள சாக்கடை இணைப்பு பெற்றவர்கள் உரிய கட்டணம் செலுத்தவும் மற்றவர்கள் புதிய இணைப்பு பெறுவதற்கும் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.