கோயிலில் தங்கி விரதமிருக்கும் பக்தர்கள் குன்றத்து கோயிலில் கந்தசஷ்டி திருவிழா
அக்.22ம் தேதி துவங்குகிறது
திருப்பரங்குன்றம், அக். 14: அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் போது பக்தர்கள் காப்பு கட்டி கோயிலுக்கு உள்ளேயும் தங்களது இல்லங்களிலும் விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா அக்.22 தேதி காலை யாகசாலை பூஜையுடன் சண்முகர், வள்ளி தெய்வானைக்கு காப்பு கட்டுதலுடன் துவங்க உள்ளது. இதனைத்தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்குவார்கள்.
அக்.22ம் தேதி முதல் 28ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விரமிருந்து சரவணப்பொய்கையில் நீராடி தினமும் இருமுறை கிரிவலம் செல்வர். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 27ம் தேதி மாலை திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் நடைபெற உள்ளது. இதற்காக கோவர்த்தனாம்பிகை அம்மனிடம் இருந்து சக்திவேல் வாங்கும் விழா 26ம் தேதி நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர் சண்முகசுந்தரம், கோயில் துணை ஆணையர் யக்ஞநாரயணன் ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.