காற்றழுத்த தாழ்வுநிலை எதிரொலி: மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை
மதுரை, டிச. 13: வடகிழக்கு பருவமழை காரணமாக, மதுரை மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. எனினும், அரையாண்டு தேர்வு காரணமாக, விடுமுறை விடப்படாததால் மாணவர்கள் நனைந்தபடியே பள்ளிகளுக்கு சென்றனர். தென்கிழக்கு வங்ககடலில் உருவான புயல் சின்னம், கடந்த வாரம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது நேற்று மேற்கு - வடமேற்கு திசையில் இலங்கை கடலோர பகுதியை நோக்கி மெதுவாக நகரும் எனவும், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை இருக்கும் எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரையை பொருத்தவரை நவம்பர் முதல் வாரத்திற்கு பின் பெரியளவு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பதிவாகாமல் இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கருமேகங்கள் சூழ்ந்து மழைக்கான அறிகுறிகள் காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை துவங்கி, விடிய விடிய மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சாரல் மழை பதிவானது. நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மதுரை கிழக்கு தாலுகாவுக்குட்பட்ட சிட்டம்பட்டியில் 3 செ.மீ, மேலூர் தாலுகா புலிபட்டியில் 1 செ.மீ, உசிலம்பட்டியில் 1 செ.மீ, சோழவந்தானில் 1 செ.மீ, மேலூரில் 1 செ.மீ, வாடிபட்டியில் 1 செ.மீ, மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து நேற்று காலை 8 மணி முதல் ஆரப்பாளையம், அச்சம்பத்து, விராட்டிபத்து, நாகமலை புதுக்கோட்டை, விளாங்குடி, கூடல்நகர், மாட்டுத்தாவணி, கே.கே. நகர், தல்லாகுளம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் மழை பதிவானது. இம்மழையால் இதமான சூழ்நிலை நிலவியது.
இதேபோல், அழகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பனிமூட்டம் மற்றும் மிதமான வெயில் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி முதல் கனமழை கொட்டியது. மழை விடாமல் தொடர்ந்து பெய்ததால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்பட்டனர். இதில் அழகர்கோவில், பொய்கைகரைப்பட்டி, அ.வலையப்பட்டி, கள்ளந்திரி, மாங்குளம், அப்பன்திருப்பதி, சுந்ததர ராஜன்பட்டி, கடச்சனேந்தல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரில் கோரிப்பாளையம் மற்றும் மேலமடை பகுதிளில் நடைபெறும் மேம்பால பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மாற்றுச்சாலைகள் ஆங்காங்கே சில இடங்களில் சேதமடைந்து உள்ளது.
இதனால் தற்போதைய மழையால் அவற்றில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். எனவே, மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மாற்றுச்சாலைகளை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் தேங்கினாலும், மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் அவற்றை உடனடியாக சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.அதேபோல், அரையாண்டு தேர்வு நடந்து வருவதாலும், மாநகர் மற்றும் புறநகரில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்பதாலும் மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கவில்லை. இதனால் மாணவர்கள் சிரமத்துடன் சாரல் மழையில் நனைந்தபடியே பள்ளிகளுக்கு சென்று திரும்பினர். இந்த மழையால் எங்கும்தண்ணீர் சாலைகளில் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.