தேனி சாலையை சீரமைக்க கோரிக்கை
மதுரை, டிச. 13: மதுரை - தேனி சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து கொச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலை, மதுரை வழியாக செல்கிறது. இதில், மதுரை - தேனி மார்க்கத்தில் எச்எம்எஸ் காலனி முதல் நாகமலை புதுக்கோட்டை வரை புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் ரூ.260 கோடி மதிப்பில் நடந்து வருகின்றன. எனினும், முடக்குச்சாலை முதல் அச்சம்பத்து வரையிலான சாலையில் சம்மட்டிபுரம் சந்திப்பு துவங்கி அச்சம்பத்து வரையிலான 2 கி.மீ தூரத்திற்கு ஆங்காங்கே சாலை பலத்த சேதமடைந்து கிடக்கிறது.
மதுரை மாநகராட்சி பகுதிகளுக்குள் இந்த நெடுஞ்சாலை செல்வதால், வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் மழையால் சேதமடைந்த சாலையில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.