துவரிமான் கண்மாயை தூர்வார ெபாதுமக்கள் எதிர்பார்ப்பு
மதுரை, அக். 13: மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது துவரிமான் கண்மாய் இதன் வாயிலாக சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. தேசிய நெடுஞ்சாலை அமைக்க கண்மாயின் நடுவே 50 ஏக்கர் மண் மேவி மூடப்பட்டது. இதன் பிறகு இந்த கண்மாயில் முழுமையாக தண்ணீர் நிரப்ப முடியாமல் போனது.
இதனால், தற்போது வரை வைகை ஆற்றிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கண்மாயில் தேங்கினாலும் குளம் போல் மட்டுமே காட்சியளிக்கிறது. மேலும், கண்மாயின் இருபுறங்களிலும் கருவேல மரங்கள் படர்ந்து தேங்கும் நீரையும் உறிஞ்சுவதால் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் செய்ய முடியாமல், பலர் விளை நிலங்களை விற்றுச் செல்லும் நிலை நீடிக்கிறது. வடகிழக்கு பருவமழை துவங்கும் நிலையில், கண்மாயில் உள்ள கருவேல மரங்களை அகற்றி தற்காலிகமாகவாவது தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நீர்வளத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.