திருமங்கலத்தில் குண்டாறு ஆஞ்சநேயர் கோயிலில் பாலாலயம்
திருமங்கலம், செப். 13: திருமங்கலம் நகரில் குண்டாற்றினை அடுத்துள்ள அனுமார் கோயில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. நூற்றாண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இக்கோயிலில், அடுத்தாண்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி அனுமார் கோயிலில் எழுந்தருளியுள்ள மூலவர் மற்றும் ராமர், சீதை, ராதா, கருடாழ்வார், வல்லபகணபதி வள்ளி தெய்வானை சமயோதித சுப்பிரமணியர், சக்கரத்தாழ்வார், நரசிம்மர் உள்ளிட்ட 15 பரிவார தெய்வங்களுக்கும் பாலாலயம் நேற்று நடைபெற்றது.
இதேபோல் கோயில் ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான கோபுரத்தில் உள்ள விமானம் உள்ளிட்ட இடங்களுக்கும் பாலாலயம் நடைபெற்றது. இதில் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான செங்குளம், வேங்கடசமுத்திரம், கண்டுகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் சங்கரேஸ்வரி, தக்கார் ராஜலட்சுமி, ஆய்வர் கலாவதி செய்திருந்தனர்.