பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்
அலங்காநல்லூர், அக். 11: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் அலங்காநல்லூரில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கூட்டுறவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலங்கல்லூரில் தொடக்க கூட்டுறவு சங்க பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு நான்காவது நாளாக நடந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க ஒன்றிய தலைவர் முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ரத்தினம், மகளிரணி தாமரை, சாந்தி, கண்ணன், பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பணியாளர்களின் இந்த போராட்டத்தால் குடிமைப்பொருள் விநியோகம் பணி பாதிக்கப்பட்டுள்ளது.