கடைகள், வாகனங்களை சூறையாடிய கும்பல்
மதுரை, அக். 11: வண்டியூரில் குடிபோதையில் கடைகள், வாகனங்களை நொறுக்கிய கும்பலால் பதற்றம் ஏற்பட்டது.
மதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரத்தில் நேற்று இரவு 9 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அந்த கும்பல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர்கள், கார்களை அடித்து சேதப்படுத்தியதுடன், கடைகளையும் அடித்து நொறுக்கியது. தொடர்ந்து, அவர்களை தடுக்க வந்த பொதுமக்களையும் கத்தியை காட்டி மிரட்டிய அந்த கும்பல், அங்கிருந்து தப்பியோடியது. இந்த சம்பவத்தில் ஆறு டூவீலர்கள், 4 கார்கள், 10 கடைகள் ஆகியவை சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா நகர் போலீசார் அங்கு, பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும், பாதுகாப்பிற்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.