அரிமளத்தை தனி தாலுகாவாக்க கோரிய மனு முடித்து வைப்பு
மதுரை, செப். 11: அரிமளம் தனி தாலுகா கோரிய மனு முடித்து வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: திருமயம் தாலுகா அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் 32 கிராம ஊராட்சிகள் உள்ளன. அரசின் திட்டங்கள், வாரிசு சான்றிதழ், வருமான சான்று பெறுதல், பட்டா மாறுதல் என அனைத்து வகையான தேவைகளுக்கும் அரிமளத்திலிருந்து சுமார் 20 கிமீ தொலைவிலுள்ள திருமயம் தாலுகா அலுவலகத்திற்கு தான் செல்ல வேண்டும்.
ஆனால், போதுமான அளவிற்கு போக்குவரத்து வசதி இல்லை. இதனால், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று அரிமளத்தை தனி தாலுகாவாக உருவாக்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவித மேல் நடவடிக்கையும் இல்லை. தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது, அரசு தரப்பில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, தனி தாலுகா உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, அரிமளம் தாலுகா அமைப்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில், கலெக்டரின் பரிந்துரை அரசின் பரிசீலனைக்காக நிலுவையில் உள்ளது என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் கோரிய நிவாரணத்தை நீதிமன்றத்தால் வழங்க முடியாது. இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.