முதலமைச்சர் கோப்பை விளையாட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு குழு போட்டி துவக்கம்
மதுரை, செப். 9: மதுரையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கான குழு போட்டிகள் நேற்று துவங்கியது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரைக்கிளை சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஆக.26ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பிரிவு, கல்லூரிகளில் பயில்வோருக்கான பிரிவு, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் என, 5 பிரிவுகளின் கீழ் தனிநபர், குழு மற்றும் தடகள போட்டிகள் நடந்து வருகிறது. இப்போட்டி செப்.12ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில், பள்ளி, கல்லூரி, பொது மற்றும் அரசு ஊழியர் பிரிவினருக்கான போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் நேற்று துவங்கியது.
இதில் அறிவுசார் குறைபாடு உடையோருக்கான எறிபந்து போட்டி, காதுகேளாத வாய் பேச முடியாதவர்களுக்கு கபடி, பார்வையற்றோருக்கு வாலிபால் போட்டியும், கை மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து போன்றவை நடந்தது. இதில் ஆண்கள், ெபண்கள் என 400க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு அணிகளாக பங்கேற்று விளையாடி அசத்தினர். விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரைக்கிளை பிரிவு மாற்றுத்திறனாளிகள் பயிற்சியாளர் ரஞ்சித்குமார், இப்போட்டிகளை ஒருங்கிணைத்தார்.