விடுதலை சிறுத்தைகள் கட்சி சாலை மறியல்
மதுரை, அக்.8: திருமாவளவன் எம்பி கார் மீது பைக் மோதியதாக கூறி ஒருவர் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக, மதுரை ஒத்தக்கடையில் விசிகவினர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவமரியாதை செய்யப்பட்டதை கண்டித்து சென்னை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் காரில் புறப்பட்டு சென்ற போது அங்கு சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பைக் ஓட்டி வந்தவரை விசிகவினர், வழக்கறிஞர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை ஒத்தக்கடை சாலையில் விசிக ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கிழக்கு மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டி முன்னிலையில் இருபதுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.