மதுரை ரயில்வே கோட்டத்தில் முன்பதிவில்லா டிக்கெட் ரூ.1 கோடிக்கு விற்பனை பண்டிகை காலம் எதிரொலி
மதுரை, அக். 7: ஆயுத பூஜை விடுமுறை முடிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் அதிகளவில் தங்கள் வசிப்பிடங்களுக்கு திரும்பினர். இதனால் அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மதுரை கோட்டத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் நேற்று முன்தினம் முன்பதிவு இல்லாத ரயில் பயணச்சீட்டு விற்பனையில் ரூ.1.03 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரை - சென்னை இடையே மெமு சிறப்பு ரயிலும், திருநெல்வேலி - சென்னை இடையே அதிவிரைவு சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டன. இந்த ரயில்களில் விசாலமான இடவசதி கொண்ட தலா 17 பெட்டிகள் இணைக்கப்பட்டன. மதுரையில் இருந்து புறப்பட்ட மெமு சிறப்பு ரயிலில் 1200 பயணிகளும், திருநெல்வேலி இருந்து புறப்பட்ட சிறப்பு ரயிலில் 2000 பயணிகளும் பயணித்தனர்.
கூட்ட நெரிசலை சமாளிக்க முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு உதவும் வகையில் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை, மற்றும் தமிழ்நாடு ரயில்வே காவல்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.