‘கிரேவி’ தராததால் ஆத்திரம் மாஸ்டரை தாக்கிய 5 வாலிபர்கள் கைது
மதுரை, ஆக. 7: புரோட்டாவிற்கு கிரேவி தராத ஆத்திரத்தில் மாஸ்டர் மீது கல்வீசி தாக்கிய சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(45). இவர் சிந்தாமணி மெயின் ரோட்டில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக உள்ளார். இவர் பணியில் உள்ள ஓட்டலுக்கு சிந்தாமணியை சேர்ந்த ஹக்கீம் மகன் முகம்மதுஅராபத்(18), ராமலிங்கம் மகன் செல்வபிரகாஷ்(20), சசிக்குமார் மகன் கோகுலகண்ணன்(18), சரவணன் மகன் பானுசந்தர்(20) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட வந்துள்ளனர்.
அவர்கள் வாங்கிய புரோட்டாவுக்கு ‘ஸ்பெஷல் கிரேவி’ ஊற்றுமாறு கேட்டுள்ளனர். அதற்கு ஆறுமுகம் மற்றும் கடையில் இருந்த கருப்பையா ஆகியோர் அந்த கிரேவி இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து புரோட்டா மாஸ்டர் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் உள்பட 5 பேரையும் நேற்று கைது செய்தனர்.