சமயநல்லூர் அருகே வைகையில் மூழ்கி மாணவன் பலி
வாடிப்பட்டி, ஆக. 7: சமயநல்லூர் அருகே வைகையில் குளிக்க சென்ற நான்காம் வகுப்பு மாணவன் ஆற்றில் மூழ்கி உயரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சமயநல்லூர் பாப்பாத்தி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மலைமேகம். பந்தல் அமைப்பாளராக உள்ளார். இவரது மகன் கருப்பு (8). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று கருப்பு தனது தாய் மாமனான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவருடன், சமயநல்லூர் வைகை ஆற்றுப்பகுதியில் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது திடீரென ஆற்று நீரில் கருப்பு இழுத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பான தகவலின் பேரில் சமயநல்லூர் போலீசார் தீயணைப்புத்துறை உதவியுடன் மாயமான கருப்புவை தீவிரமாக தேடினர். ஆனால் சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பின், பரவை அருகே வைகை ஆற்றுப் பகுதியில் சிறுவனை அவர்கள் சடலமாக மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாமனோடு குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது