செல்லூர் கால்வாய் பணி நிறைவு
மதுரை, ஆக. 6: செல்லூர் கண்மாயிண் உபரிநீர் வெளியேறுவதற்காக கட்டப்படும் சிமென்ட் கால்வாய் பணிகள் முடிவடைந்துள்ளதாக நீர்வளத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றின் கீழ் பாசன வசதி பெறும் கண்மாய்களில், முக்கியமானது செல்லூர் கண்மாய். கடந்தாண்டு அக். 25ம் தேதி பெய்த கனமழையால் இக்கண்மாயிலிருந்து உபரிநீர் வெளியேறி ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து வெள்ள பாதிப்பை தடுக்க, ரூ. 15.10 கோடியில் 290 மீட்டர் நீளம், 4 மீட்டர் அலகத்தில் புதிதாக சிமென்ட் கால்வாய் கட்டும் பணிகள் கடந்தாண்டு நவம்பரில் துவங்கின. கடந்த மாதம் வரை நடந்த இப்பணிகள், சமீபத்தில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்,‘கண்மாயிலிருந்த பழைய மதகுகளை அகற்றி புதிய மதகுகள் பொருத்துவது முதல் கால்வாய் கட்டுவது வரை அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இதனால், வரும் பருவமழையின் போது பெருமழை பெய்தாலும் செல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாது. அடுத்தகட்டமாக பந்தல்குடி கால்வாயும் ரூ.70 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணை இந்த மாத இறுதிக்குள் வரும் என, எதிர்பார்க்கிறோம்,’’ என்றனர்.