ஏஐடியூசி கோரிக்கை ஆர்ப்பாட்டம்
மதுரை, ஆக. 6: மதுரையில் உள்ள மண்டல போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு ஏஐடியூசி அமைப்பின் சார்பில் நேற்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல அலுவலகம், பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது. இதன் முன்பாக ஏஐடியூசி சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், சங்கத்தின் மூத்த தலைவர் அலாவுதீன், மாநில துணை பொதுச் செயலாளர் நாராயண சிங் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்க கூடாது.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 25 மாத பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். தனியார் மற்றும் டெண்டர் முறையில் காலி பணியிடங்கள் நிரப்புவதை திரும்ப பெற வேண்டும். வாரிசு அடிப்படையில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். உடல் தகுதி தேர்வுக்கு மருத்துவ வாரியத்திற்கு சென்று வந்த தொழிலாளர்களுக்கு தகுதி அடிப்படையில் மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.