வாடிப்பட்டி அருகே தலைகுப்புற கவிழ்ந்தது மினி பஸ் 36 பேர் காயம்; 4 பேர் சீரியஸ்
வாடிப்பட்டி, நவ. 5: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் இருந்து நேற்று தனியார் மினி பஸ் 45 பயணிகளுடன் வாடிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. கரட்டுப்பட்டியை சேர்ந்த தங்கவேல்(25) பஸ்சை ஓட்டி வந்தார். வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் ரயில்வே கேட் அருகே பெருமாள்பட்டி எனும் இடத்தில் பஸ் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பயணிகள் முருகேஸ்வரி(60), முத்துச்செல்வன்(24), ஹேமா(40), ராஜேந்திரன்(36) உள்பட 36 பயணிகள் காயமடைந்தனர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் 28 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் குறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.