நோய் தாக்குதலில் இருந்து வாழையை காப்பாற்றலாம் வேளாண் துறையினர் வழிகாட்டல்
மதுரை, அக். 4: நோய் தாக்குதலில் இருந்து வாழையை எளிதில் காப்பாற்றலாம் என, வேளாண் துறையினர் கூறியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழையில் முடிக்கொத்து நோய் அதிக அளவில் காணப்படும். இது ஒரு வைரஸ் நோயாகும். இந்த நோய் தாக்கப்பட்ட வாழை மரங்களின் இலைகள் சிறுத்தும், மஞ்சள் நிறம் மற்றும் கரும்பச்சை கோடு, புள்ளிகளுடன் அடுக்கடுக்காக இலைகள் வெளிவரும்.
இந்த வைரஸ் நோய் தாக்கப்பட்ட மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மேலும், கன்று நடுவதற்கு முன்பாக கார்போபியூரான் 3ஜி குருணை மருந்தினை 40 கிராம் அளவில் எடுத்து களிமண் குழம்பில் கலந்து கிழங்கில் பூச வேண்டும்.அசுவினி நோயானது வாழை முடிக்கொத்து நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியை அதிக அளவில் பரப்புகிறது.
இதனை கட்டுப்படுத்த டைமெத்தோபேட் ஒரு மில்லி அல்லது மெத்தில் டெமட்டான் 2 மில்லி இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தண்டின் மேல் பகுதியில் இருந்து அடி வரை தெளிக்க வேண்டும். இதனை 21 நாள் இடைவெளியில் 3 முறை மேற்கொள்ளவேண்டும். இந்த நடைமுறையை கையாளுவதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து வாழையை காப்பாற்றலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.