ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
மதுரை, நவ. 1: கன்னியாகுமரியில் 5 நாட்கள் நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சியில் மதுரை மாவட்டத்தில் இருந்து 166 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நவ.3ம் தேதி முதல் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதன்படி பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிவடைந்ததையடுத்து எந்த பாடத்தில் மாணவர்கள் பின்தங்கியுள்ளனர்,
அவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துதல், மாணவர்களிடம் புதிய திறன்களை வளர்த்தல் போன்ற பல பயிற்சிகள் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகிறது. அதற்காக நடப்பு கல்வியாண்டில் மண்டல அளவில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.
இதில் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான தமிழ் மற்றும் அறிவியல் பாடங்களின் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். அதன்படி, தமிழ் பாட ஆசிரியர்களுக்கு கன்னியாகுமரியிலும், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையிலும் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. இதில் மதுரை மாவட்டத்தில் இருந்து 30 தமிழாசிரியர்களும், 136 அறிவியல் ஆசிரியர்கள் என, 166 பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.