நோயாளிகள் நலன் கருதி அரசு மருத்துவமனையில் ரத்தவியல் துறை திறப்பு: விரைவில் எலும்பு மஜ்ஜை பிரிவு
மதுரை, அக். 25: மதுரை அரசு மருத்துவமனையில் ரத்தவியல் துறை மற்றும் புறநோயாளிகள் பிரிவு நேற்று புதிதாக தொடங்கப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் வசதிக்காக ரத்தவியல் துறை மற்றும் புறநோயாளிகள் பிரிவு நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இதை மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீன் அருள் சுந்தரேஷ்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரவேல், மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் மல்லிகா, பொது மருத்துவத்துறை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் டாக்டர் செந்தில், குழந்தைகளநலப்பிரிவு துறை இயக்குநர் டாக்டர் அனுராதா, நோயியல் துறை பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் டாக்டர் ராணி, குழந்தைகள் நலத்துறை பேராசிரியர் டாக்டர் குணா, மருத்துவ புற்றுநோய் துறை பேராசிரியர் டாக்டர் ஜெபசிங், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் முரளிதரன், மருத்துவத்துறை உதவிப்பேராசிரியர் டாக்டர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்படி துவக்கப்பட்டுள்ள ரத்தவியல் துறை மற்றும் புறநோயாளிக்கான பிரிவு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும். இதில், ரத்தப் புற்றுநோய் மற்றும் ரத்த உற்பத்தி, வெள்ளை அணுக்கள், தட்டை அணுக்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கான தகுந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு, பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்.
இதற்கிடைையே அடுத்தகட்டமாமக அதிநவீன உயர் சிகிச்சையான எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான வசதிகள் மதுரை அரசு மருத்துவமனையில் விரைவில் அமைக்கப்பட உள்ளது. அப்போது ரத்தவியல் மற்றும் எலும்பு மஜ்ஜை பிரிவு, சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை அரசு மருத்துவமனையில் மட்டுமே உள்ளது என்ற நிலை ஏற்படும். தென் மாவட்டங்களில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் இந்த கட்டமைப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.