மரக்கன்று, பனை விதை நடவுக்கு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்: ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் தகவல்
மதுரை, அக். 25: மதுரை மற்றும் மேலூர் கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பு ஆசிரியர்களுடன், அவற்றின் செயல்பாடுகள் குறித்து மதுரையில் உள்ள முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோகிணி உத்தரவின் பேரில், மதுரை மற்றும் மேலூர் கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் பசுமைப்படை மன்ற ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம், நேற்று முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறையின் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் அதிக மரக்கன்றுகளை நட மாணவர்களை சுற்றுசூழல் மன்ற ஒருங்கிணைப்பு ஆசிரியர் ஊக்குவிக்க வேண்டும். பனை மர விதைகள் அதிகமாக நடவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பள்ளிகளில் வீட்டுத் தோட்டம், மூலிகை தோட்டம் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். குறிப்பாக உலக சுற்றுச்சூழல் தினம், காடுகள், மரங்கள், ஓசோன் உள்ளிட்ட பல்வேறு பசுமை தினங்களின் போது மாணவர்களுக்கு விழிப்புணர்வு பேரணிகள், கட்டுரை, ஓவியம், கவிதை போட்டிகள் நடத்தி அவர்களிடையே சுற்றுசூழல் சார்ந்த ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும். மேலும் விதைப்பந்து செய்யும் முறைகள், அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மதுரை கல்வி மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல், மேலூர் கல்வி மாவட்டம் சார்பில் முத்துவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் மதுரை மற்றும் மேலூர் கல்வி மாவட்டத்திற்குற்பட்ட பள்ளிகளில் இருந்து சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.