வடமதுரை டூ செங்குறிச்சிக்கு பஸ்கள் இயக்க வேண்டும் அனைத்து தரப்பினர் கோரிக்கை
வடமதுரை, அக். 23: வடமதுரை- செங்குறிச்சி இடைய பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமதுரையில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது செங்குறிச்சி கிராமம். இந்த வழித்தடத்தில் மற்றும் சுற்றுப்புறங்களில் ஊத்தங்கரை, V.குரும்பபட்டி, வேலாயுதம்பாளையம், ஆலம்பட்டி, காட்டுப்பட்டி, கம்பிளியம்பட்டி, வல்லம்பட்டி, குடகிப்பட்டி, சடையம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. செங்குறிச்சிக்கு வடமதுரையில் இருந்து போதிய பஸ் வசதி இல்லை. இதனால் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் வடமதுரை வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுதவிர செங்குறிச்சி அருகில் மிகவும் பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு வடமதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், மாத கார்த்திகை ஆகிய விசேஷ நாட்கள் மற்றும் சாதாரண நாட்களில் சாமி கும்பிட வருகின்றனர். இவர்களும் போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தால் ஆட்டோக்கள் மற்றும் வாடகை வாகனங்களில் வரும் நிலைமை உள்ளது.
மேலும் தாராபுரத்தில் இருந்து வடமதுரை வழியாக செங்குறிச்சிக்கு காலை 8.15 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் என இரண்டு முறை மட்டுமே ஒரு தனியார் பஸ் மட்டுமே வந்து செல்கிறது. பகல் நேரங்களில் செங்குறிச்சி- வடமதுரை வழித்தடத்தில் நேரடி பஸ் வசதி இல்லை. வடமதுரை காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள், பகல் நேரங்களில் செங்குறிச்சி- வடமதுரை வழித்தடத்தில் போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தால் செங்குறிச்சியில் இருந்து திண்டுக்கல் சென்று அதன்பின் வடமதுரைக்கு 40 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் கூடுதல் பயண நேரம் ஏற்படுவதுடன் செலவும் அதிகமாகிறது.
இதுதவிர செங்குறிச்சி கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் வேடசந்தூரில் செயல்பட்டு வரும் அரசு கலை கல்லூரியில் படித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் கல்லூரி செல்ல காலை நேரங்களில் பஸ் வசதி இல்லாததால் இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் அந்த வழியாக வரும் சரக்கு வாகனங்களில் பயணித்து வடமதுரை வந்து அதன்பின் பஸ் பிடித்து வேடசந்தூர் கல்லூரிக்கு செல்கின்றனர்.
இதேபோல் செங்குறிச்சி சுற்றுவட்டார பகுதி மக்கள் எரியோடு, வேடசந்தூர், கரூர், திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்பவர்கள் குறைந்த தூரத்தில் உள்ள வடமதுரைக்கு வந்து பஸ் ஏறி செல்வது எளிதாக இருந்தும் பகல் நேரத்தில் நேரடி பஸ் வசதி இல்லாத காரணத்தால் திண்டுக்கல் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலை, பகல், மாலை நேரங்களில் வடமதுரை- செங்குறிச்சி வழித்தடத்தில் போதிய பஸ் சேவை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.