சாலையோர குப்பைகளால் அவதி: அகற்றிட பொதுமக்கள் கோரிக்ைக
மதுரை, செப். 22: காதக்கிணறு பகுதியில் ரோட்டோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அழகர்கோயில் சாலையில், கடச்சனேந்தலை அடுத்துள்ள காதக்கிணறு பகுதியில் அதிகளவில் பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை சாலையோரம் கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவை அகற்றப்படமால் மாதக்கணக்கில் சேர்வதால் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதனைதடுக்க உரிய நடவடிக்கை தேவை என, பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘இங்கு முறையாக குப்பை தொட்டிகள் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் இறைச்சி கடைகள், ஓட்டல்கள், வார சந்தை வியாபாரிகள் தங்களிடம் சேரும் கழிவுககளை பாலித்தீன் பைகளில் கட்டி எடுத்துக்கொண்டு வந்து சாலையோரம் வீசுகின்றனர். இவை அகற்றப்படாமல் மாதக்கணக்கில் கிடப்பதால்வாகன ஓட்டிகள் முதல் அப்பகுதி மக்கள் வரை கடும் சுகாதாரச் சீர்கேட்டால் தவிக்கின்றனர். மேலும் இந்த குப்பைகளில் கிடக்கும் உணவுப்பொருட்களை கால்நடைகள் சாப்பிடுவதால் அவற்றின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால், நோய்தொற்று பரவும் முன்பாக குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.