யூனியன் அலுவலகம் முற்றுகை
திருமங்கலம், ஆக. 19: கள்ளிக்குடி அருகேயுள்ள நேசனேரி கிராமத்தில் அமைந்துள்ள கண்மாயில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமுள்ளன. இந்தநிலையில் இந்த கண்மாயில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்றுவதற்கு தனிநபர் ஒருவர் ஏலம் எடுத்துள்ளதாக கிராம மக்களிடம் தெரிவித்தார். இதனால் நேசனேரி, சுப்புலாபுரம் கிராமமக்கள் திரண்டு கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
அப்போது பிடிஓ இதுவரை யாரும் மரங்களை வெட்டுவதற்கு ஏலம் எடுக்கவில்லை என்றார். இதனை தொடர்ந்து கிராம மக்கள் டெண்டர் அறிவித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பிடிஓவிடம் கோரினர். அதற்கு பதில் அளித்த அவர் வரும் செப்டம்பர் மாதம் 3ம் தேதி இது தொடர்பான ஏலம் கள்ளிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் என்றார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.