அழகர்கோவில் சுற்றுப்பகுதியில் செங்கரும்புகள் விளைச்சல் அமோகம்: கூடுதல் விலை எதிர்பார்க்கும் விவசாயிகள்
மதுரை, டிச. 12: பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், அழகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் செங்கரும்பு விளைச்சல் அமோகமாக இருப்பது, விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொங்கல் என்றாலே கரும்புக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் தைப்பொங்கலுக்கு இன்னும் 45 நாட்களே உள்ள நிலையில், அழகர்கோவில் சுற்றுப்பகுதியில் உள்ள கிழக்கு தாலுகாவிற்குட்பட்ட கள்ளந்திரி, மாங்குளம், சின்னமாங்குளம், அப்பன் திருப்பதி, மஞ்சம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பத்து மாத பயிரான செங்கரும்பு சாகுபடி அதிகவில் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் வாழை, நெல்லுக்கு அடுத்தபடியாக அதிகளில் பயிர் செய்யப்படும் வேளாண் விளைபொருளாக கரும்பு இருந்து வருகிறது. இதற்கிடையே தற்போது தொடர் மழை காரணமாக இப்பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் கிணறுகள் நிரம்பியுள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விளைச்சலுக்கு உதவுகிறது.
இந்தாண்டு மார்ச் மாத துவக்கத்தில், இப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் செங்கரும்பு நடவு செய்தனர். பின்னர் அவ்வபோது தோகை உரித்து, சரியான நேரத்தில் வேர் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேளாண் துறையினர் பரிந்துரை அடிப்படையில் தேவையான மருந்துகள் அடித்து பாதுகாக்து வந்தனர். இதற்கிடையே பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் பலத்த காற்றின் எதிரொலியாக கரும்புகள் சாய்ந்து விடாமல் இருக்க, தடுப்பு குச்சிகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் இப்பகுதியில் கரும்பு விளைச்சல் அமோகமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்சி அடைந்துள்ளனர்.
மேலும் இப்பகுதியில் விளையும் கரும்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதன்படி 15 எண்ணிக்கை கொண்ட கரும்பு கொண்டது ஒரு கட்டு என அழைக்கப்படும். ஒரு கட்டுக்கு ரூ.600 முதல் ரூ.750 வரை விலை வைத்து விற்பனை செய்ய முடியும் என, இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.