மதுரை காமராஜர் பல்கலையில் நீதிபதி பரிந்துரைப்படி பதவி உயர்வு வேண்டும்: பேராசிரியர்கள் சங்கம் கோரிக்கை
திருப்பரங்குன்றம், அக். 12: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பதவி உயர்வு வழங்குவதில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக நீதியரசர் தலைமையிலான கமிட்டி விசாரித்து பரிந்துரை செய்துள்ளது. அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பேராசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், கடந்த 2017 மற்றும் 2020ம் ஆண்டுகளில் நடைபெற்ற பேராசிரியர்கள் பதவி உயர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதன்படி தகுதியற்ற சிலருக்கு பதவி உயர்வு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அதுகுறித்து விசாரிக்க நீதியரசர் அக்பர்அலி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த விசாரணையில் முறைகேடுகள் கண்டறியப்பட்ட நிலையில், அதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பல்வேறு பரிந்துரைகள் கமிட்டி தரப்பில் வழங்கப்பட்டது.
இருப்பினும் அந்த பரிந்துரைகளை பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது வரை செயல்படுத்தாமல் இருந்து வருகிறது. இதனால் தகுதியுள்ள பலரும் பதவி உயர்வு பெற முடியாமல் உள்ளனர். மேலும் நீதியரசர் அக்பர் அலி கமிட்டியின் பரிந்துரை அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டிய சிலர் தற்போது உயர் பதவியில் உள்ளதாகவும் தெரிகிறது. எனவே கமிட்டி பரிந்துரைப்படி பதவி உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக கன்வீனர் சுந்தரவல்லியிடம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.