மதுரை டவுன்ஹால் ரோட்டில் தெப்பக்குளத்தை சுற்றிய 99 கடைகள் அகற்றம்
மதுரை, ஆக. 12: மதுரை டவுன் ஹால் ரோட்டில் கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 99 கடைகள் இடித்து அகற்றப்பட்டன. மதுரை நகரின் முக்கியத்துவம் வாய்ந்த டவுன்ஹால் ரோடு பகுதியில் கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் அமைந்துள்ளது. இந்த தெப்பகுளத்தை சுற்றிலும் ஏராளமான கடைகள் வாடகைதாரர்களாக பல்லாண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தனர். இந்நிலையில் அவர்களின் கடைகளை அகற்ற வேண்டும் என கோயில் நிர்வாகம் தரப்பில் உத்தரவிட்டு, கடைகளை அகற்றுமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த கடைகளின் உரிமையாளர்கள் நீதிமன்றம், தீர்ப்பாயத்திற்கு சென்றனர். ஆனால் விசாரணை முடிவில் கோயில் நிர்வாகத்திற்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை ஐகோர்ட் கிளை கோயில் நிர்வாகத்திடம் கடைகளை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, நேற்று காலை கோயில் நிர்வாகத்தினர் முன்னிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் கடைகள் இடிக்கப்பட்டன. இதன்படி தெப்பக்குளத்தின் நான்கு கரைப்பகுதிகளிலும் இருந்த 99 கடைகளுடன், ஒருபகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களும் இடிக்கப்பட்டன. இதனால் நேற்று இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.