இரு குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி: கல்குவாரி பள்ளங்களில் பாதுகாப்பு அவசியம்: பொதுமக்கள் கோரிக்கை
மதுரை, ஆக. 12: மதுரையில் கல்குவாரி பள்ளங்கள் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் வேலி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பாண்டியன் கோட்டை, ஒத்தக்கடை, அலங்காநல்லூர், பாலமேடு, கள்ளிக்குடி, உசிலம்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கல் குவாரிகளுக்காக தோண்டப்பட்ட பெரிய அளவிலான பள்ளங்கள் உள்ளன. பாதை உள்ள பகுதியில் இருந்து 500 மீட்டர் முதல் ஒரு கிலோ மீட்டர் வரை இடைவெளி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் கல்குவாரிகள் அமைப்பதற்கு உள்ளன. குவாரிகளை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும்.
குவாரியின் உரிமம் யார் பெயரில் உள்ளது, எந்த ேததி வரை உள்ளது மற்றும் குவாரியின் ஆழம் மிகுந்த பகுதிகளின் ஆபத்தை அறிவிக்கும் வகையில், எச்சரிக்கை பதாகைகளை கனிம வளத்துறையினர் அமைத்திட வேண்டும் எனவும் உத்தரவுகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் மதுரை பாண்டியன்கோட்டை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற குவாரி பகுதிக்குச் சென்ற இரு குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
* இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘மாவட்டத்தில் சாலையை ஒட்டிய பகுதிகளில் எங்கெங்கு கல்குவாரிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் உள்ளன என்பதை முறையாக அதிகாரிகள் கண்டறிய வேண்டும். சாலையோரம் உள்ள குவாரிகளை அடுத்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு, பாதுகாப்பு வேலிகள், மின் விளக்குகள், அபாயகரமான பகுதி என்ற அறிவிப்பு பலகை, தடுப்புச்சுவர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்த வேண்டும்’ என்றனர்.