விக்கிரமங்கலம் பகுதி விவசாய சங்கத்திற்கு ரூ.30 லட்சத்தில் நெல் அறுவடை இயந்திரம்: முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு
சோழவந்தான், டிச. 11: மதுரையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், விக்கிரமங்கலம் பகுதி விவசாய சங்கத்திற்கு முழு மானியத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான நெல் அறுவடை இயந்திரம் வழங்கியதற்காக, தமிழக முதல்வருக்கு விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பகுதியில் அதிக அளவில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் செல்லம்பட்டி வட்டார ஐராவதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் எனும் விவசாய சங்கத்தினர், சுமார் ஆயிரம் விவசாயிகளை குழுவாக ஒன்றிணைத்து செயல்பட்டு வருகின்றனர். இச்சங்கத்தினர் வேளாண் துறையினர் மூலம் விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்டங்கள் செய்து வருகின்றனர். 3 போகம் நெல் விவசாயம் நடைபெறும் இப்பகுதியில், அறுவடை காலத்தில் அதற்கான இயந்திரம் பற்றாக்குறையால் விவசாயிகள் சிரமமுற்று வந்தனர்.
இதற்காக நெல் அறுவடை இயந்திரம் வழங்குமாறு மதுரை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மதுரையில் கடந்த டிச.7ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், இச்சங்கத்திற்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நெல் அறுவடை இயந்திரம் முழு மானியத்தில் வழங்கப்பட்டது. இதையடுத்து வேளாண்மை துணை இயக்குனர் (வணிகம்) மெர்ஸி ஜெயராணி, வேளாண்மை அலுவலர்கள் சுந்தர பாண்டியன், சித்தார்த் ஆகியோர் முன்னிலையில் ஐராவதம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்களான ரஞ்சித், பால்பாண்டி ஆகியோரிடம் அறுவடை இயந்திரம் வழங்கப்பட்டது. இப்பகுதி விவசாயிகள் ,இந்த அறுவடை இயந்திரத்தை பயன்படுத்தி பயன்பெறலாம் என்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் ரூ.30 லட்சம் மதிப்பிலான இயந்திரத்தை மானியமாக வழங்கிய, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, விவசாயிகள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.