கோரிப்பாளையம் மேம்பால திட்டம்: நில ஆர்ஜித பணிகள் 70 சதவீதம் நிறைவு
மதுரை, செப். 3: கோரிப்பாளையம் மேம்பால திட்டத்திற்காக நில ஆர்ஜித பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை கோரிப்பாளையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக தமிழக நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில் ரூ.190.40 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்காக ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக நில ஆர்ஜித பணிகள் முடிந்திருந்த நிலையில், மீதமுள்ள 8,375 சதுரமீட்டர் நிலத்தை கையகப்படுத்த வருவாய் நிர்வாக ஆணையரிடமிருந்து சமீபத்தில் அனுமதி கிடைத்தது. வருவாய்த்துறை பரிசீலனையில் நில ஆர்ஜிதம் தொடர்பான கோப்புகள் இருந்தபோதே குறிப்பிட்ட சில கட்டிடங்களை நெடுஞ்சாலைத்துறையும், கட்டிடங்களின் உரிமையாளர்களும் சேர்ந்து இடித்து வந்த நிலையில், முழுவதுமாக நிலம் ஒப்படைக்கப்பட்ட பின் பணிகள் வேகமெடுத்தன.
இதன் வாயிலாக தற்போது வரை, 70 சதவீதம் நில ஆர்ஜித பணிகள் முடிந்துள்ளதாகவும் இரவு, பகலாக பணிகள் நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இம்மாத இறுதிக்குள் நில ஆர்ஜித பணிகளை முடித்து தூண்கள் முடிந்துள்ள பகுதிகளில் மேல்தளம் அமைக்கும் பணிகளையும், மற்ற இடங்களில் அணுகுசாலை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளையும் துவக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.