இந்த கல்வியாண்டில் மட்டும் 4 லட்சம் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்
மதுரை, செப். 3: இந்த கல்வியாண்டில் மட்டும் 4 லட்சம் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியுள்ளார். மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட செட்டிகுளம் ஊராட்சியில் அமைந்துள்ள ஊமச்சிகுளம் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான ஆணையை வழங்கி மாணவர் சேர்க்கையினை அமைச்சர்கள் பி.மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த விழாவினை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இந்த ஆண்டு மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளோம். அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைவு என அண்ணாமலை பழைய தரவுகளை வைத்து குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். இன்னும் புதிய தரவுகள் அடங்கிய அறிக்கை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் வெளியிடப்படவில்லை. அரசு பள்ளி என்பது சேவை அடிப்படையில் செயல்படக்கூடியது. தனியார் பள்ளி என்னதான் கல்வியை போதித்தாலும் அவர்கள் லாப நஷ்ட கணக்கு பார்க்கக் கூடியவர்கள். வெறும் நான்கு குழந்தைகள் இருந்தாலும் அந்த நான்கு குழந்தைகளுக்காக ஒரு கட்டிடம் கட்டுவோம், ஆசிரியரை நியமிப்போம், சேவை மனப்பான்மையோடு அரசு செயல்படும்.
நாங்கள் ஒரு பக்கம் நாடாளுமன்றத்தில் எங்கள் உரிமை குரலை நிலைநாட்டினாலும், கூட்டணி கட்சி எம்பியான சசிகாந்த் செந்தில் எம்பி நாடாளுமன்ற கவனத்தை அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தினார். அவர் தன்னுடைய உடலை வருத்திக்கொண்டு தனக்குரிய முறையில் போராட்டத்தை நடத்தி இருந்தார். முதலமைச்சர் ஜெர்மனியில் இருந்தாலும் சசிகாந்த் செந்தில் எம்பியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழியை உடனடியாக அனுப்பி வைத்தார். சசிகாந்தாக இருந்தாலும் சரி, அன்பில் மகேஷ் பொய்யா மொழியாக இருந்தாலும் சரி ஒட்டுமொத்தமாக எல்லோரும் சேர்ந்து மக்கள் குரலாக மக்கள் இயக்கமாக மாறி, அப்படியாவது ஒன்றிய அரசு பள்ளிக் கல்வி நிதியை விடுவிப்பார்களா என்ற ஏக்கம் தான் எங்களுக்கு உள்ளது’’என்றார்