தாம்பரம்: பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் மற்றும் செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் பகுதியாக இன்று ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:சென்னை சென்ட்ரல் கூடூர் பிரிவில் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக, இன்று மற்றும் நாளை மறுநாள்(10ம் தேதி) காலை 9.15 மணி முதல் மதியம் 3.15 மணி வரை (6 மணி நேரம்) ரயில் மற்றும் மின்சாரத் தடை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இஎம்யு/மெமு ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.பகுதியளவு ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:செங்கல்பட்டு கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.55 மணிக்கு புறப்படும் ரயில், சென்னை கடற்கரை கும்மிடிப்பூண்டி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி தாம்பரம் இடையே மதியம் 3 மணிக்கு புறப்படும் ரயில் கும்மிடிப்பூண்டி சென்னை கடற்கரை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு மாற்றாக சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.