அய்யலூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து
வேடசந்தூர், ஜூலை 8: அய்யலூர் அருகே, வைக்கோல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (55). இவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரபீக் (48) ஆகிய இருவரும் நேற்று தஞ்சாவூரிலிருந்து, கோழிக்கோடு பகுதிக்கு லாரி மூலம் வைக்கோல் ஏற்றிக்கொண்டு சென்றனர். நேற்று மாலை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அய்யலூர் புறவழிச்சாலை பிரிவு அருகே வரும்போது, லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்புச் சுவர் மீது ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவரும் சிறுகாயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த வடமதுரை காவல்துறையினர், விபத்தில் சிக்கிய லாரியை மீட்டு, போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தின் காரணமாக, திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் அரசு பேருந்துகள் அய்யலூருக்கு செல்லாமல் பாலத்தின் மேல் பகுதியில், இறக்கி விட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.