மானாமதுரை ரயில் நிலையத்தில் பூட்டியே கிடக்கும் பாத்ரூம்: திறக்க கோரிக்கை
மானாமதுரை, மே 30: மானாமதுரை ரயில் நிலைய வாசலில் கட்டப்பட்ட பொது கழிப்பறையை பராமரிக்க ஆட்கள் நியமித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை ரயில் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கும், விருதுநகர், காரைக்குடி, ராமேஸ்வரம், மதுரை மார்க்கங்களில் உள்ள வெளியூர்களுக்கும் செல்ல பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணித்து வருகின்றனர். இதனால் ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் காணப்படுவது வழக்கம். மேலும் பரமக்குடி, ராமநாதபுரம் அரசு பள்ளிகளுக்கும், காரைக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் சென்று வரும் மாணவ, மாணவிகள் சொந்த ஊர் செல்ல ரயில் நிலையத்துக்கு வருன்றனர். மேலும் பயணிகளுக்கு வழியனுப்ப வருபவர்கள், வானங்களில் அழைத்து செல்ல வருபவர்களும் தினசரி ஏராளமாேனோர் வருகின்றனர்.
இவ்வாறு வருபவர்கள் இயற்கை உபாதை செல்ல சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் நிலையத்தின் வாசலில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் போர்ட்டபிள் (portable) டைப் கழிப்பறை கட்டிடம் கட்டி தரப்பட்டது. ஆனால், இந்த கழிப்பறை கட்டிடத்தை பராமரிப்பதற்கு ஆட்கள் நியமிக்க ரயில்வே நிர்வாகம் முன்வரவில்லை. இந்த காரணத்தால் கட்டி முடித்து 4 ஆண்டுகளை கடந்தும் இந்த கழிப்பறை கட்டிடம் திறக்கப்படாமலேயே மூடி கிடக்கிறது. இதனால் தற்போது அந்த கழிப்பறையை சுற்றிலும் புதர் மண்டி, குப்பைகள் நிறைந்தும் காணப்படுகிறது.
ஆண், பெண் என தனித்தனியே இரண்டு கழிப்பறை கட்டிடங்கள் இருந்தும், இரண்டுமே பயணிகளுக்கு பயன்படாமல் இருப்பது ரயில்வே பயனாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பயனாளர்கள் கழிப்பிடம் இல்லாமல், பொது இடங்களை பயன்படுத்துகின்றனர் அதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகி பால்நல்லதுரை கூறுகையில், ‘ஏற்கவவே ரயில் நிலையத்தின் உள்ளே உள்ள கழிப்பறை கட்டிடம் பழுதாகி உள்ளது. இந்த கழிப்பறையும் கட்டி திறக்கப்படாமல் உள்ளதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே என்பதால் ரயில்வே நிர்வாகம் இந்த கழிப்பறையை பராமரிக்க ஆட்கள் நியமித்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.