11 அடி உயர முனீஸ்வரர் சிலைக்கு கும்பாபிஷேகம்: கிராம மக்கள் பெருந்திரளாக தரிசனம்
திருத்தணி, ஜூலை 14: திருத்தணி அருகே, எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் எல்லையம்மன் குளக்கரையில் புதிதாக முனீஸ்வரருக்கு 11 அடி உயரத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிலையைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு யானை மற்றும் குதிரை வாகனங்கள் மற்றும் பச்சையம்மன் சிலைக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முனீஸ்வரர் சிலைக்கு கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடைபெற்றது.
விழாவையொட்டி, யாகசாலைகள் அமைக்கப்பட்டு விநாயகர் பூஜை, கோ பூஜை, நவகிரக பூஜை, பூர்ணாஹுதி உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை மகாபூர்ணாஹூதியை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோயில் அர்ச்சகர் கண்ணையன், பரணி கார்த்திகேயன் குருக்கள், சுகுமார் சிவாச்சாரியார்கள் ஆகியோர் முனீஸ்வரருக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
தொடர்ந்து, இதர பரிகார தேவதைகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. எஸ்.அக்ரஹாரம் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் பெண்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. எஸ்.அக்ரஹாரம் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.