வல்லக்குறிச்சி கிராமத்தில் பாவாடைராயன் அறன் நாச்சியார் ஆலய கும்பாபிஷேக விழா
ஜெயங்கொண்டம், ஜூலை 15: ஆண்டிமடம் அருகே பெரிய கிருஷ்ணாபுரம் வல்லக்குறிச்சி கிராமத்தில் உள்ள அறன் நாச்சியார் உடனுறை பாவாடைராயன் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரிய கிருஷ்ணாபுரம்- வல்லக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அறன் நாச்சியார் உடனுறை பாவாடைராயன் திருக்கோவில் கும்பேபிஷேகம் செய்வதென முடிவெடுத்து குலதெய்வ வழிபாட்டு பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கோவிலை புதுப்பிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக திருவிழாவிற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜை, சுத்தி புண்யாக வாஜனம், கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து நவகிரக ஹோமம், கோபூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகசால பூஜைகள் நடைபெற்றது. இந்த நிலையில் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா நேற்று காலை விமர்சையாக நடந்தேறியது. முன்னதாக கடம் புறப்பாடு மங்கள வாத்தியத்துடன் ஊர்வலமாக கோவிலை வலம் வந்து கருட பகவான் வட்டமிட கோவில் விமான கலசத்திற்கு புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினர். அப்போது பக்தி கரகோஷங்களை எழுப்பி பக்தர்கள் பல்வேறு கிராமத்திலிருந்து வந்திருந்த கிராமவாசிகள் வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து அறன் நாச்சியார் பாவாடைராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. பெரிய கிருஷ்ணாபுரம் வல்லக்குறிச்சி சுற்றியுள்ள கிராமவாசிகள் மற்றும் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.