தக்காளி தோட்டத்தை சேதப்படுத்திய யானைகள்
தேன்கனிக்கோட்டை, ஆக.30: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குருபட்டி கிராமத்தில், பேலாளம் பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவர், 4.5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலத்தில் அவர் தக்காளி பயிரிட்டு இருந்தார். நேற்று முன்தினம் இரவு, அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள், கிருஷ்ணமூர்த்தியின் தக்காளி தோட்டத்திற்குள் புகுந்து காய்களுடன் கூடிய செடிகளை சேதப்படுத்தி சென்றன. இதில் 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான தக்காளி பழங்கள், செடிகள் சேதமானது. நேற்று காலை வழக்கம்போல் வயலுக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி, இதை கண்டு வேதனை அடைந்தார். தொடர்ச்சியாக விவசாய பயிர்கள் யானைகளால் சேதமாகி வருவதால், அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து, அவை வனப்பகுதியை விட்டு வெளியே வராமல், அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.