கோயில் அருகே சுற்றி திரிந்த ஒற்றை யானை
தேன்கனிக்கோட்டை, நவ.29: தேன்கனிக்கோட்டையில் கோயில் அருகே சுற்றி திரிந்த ஒற்றை யானையால் விவசாயிகள் அச்சமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம் நொகனூர் வனப்பகுதியில், 5க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் தனித்தனியாக பிரிந்து, அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், வாழை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை, தினமும் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து காலை, மாலை நேரங்களில் சுற்றி திரிகிறது. இந்த யானை, விவசாய நிலங்களில் புகுந்து ராகி பயிர்களை தின்று நாசம் செய்கிறது. நேற்று முன்தினம் இரவு, மாரசந்திரம் கிராமம் அருகே சுற்றி திரிந்த ஒற்றை யானையை, வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். அப்போது, அய்யூர் சாலையில் ஆஞ்சநேயர் கோயில் அருகே சாலையில் சுற்றி திரிந்துள்ளது. இதையறிந்த விவசாயிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவலின் பேரில், சம்பவ இடம் சென்ற தேன்கனிக்கோட்டை வனத்துறையினர், பட்டாசு வெடித்து அந்த யானையை காட்டிற்குள் விரட்டியடித்தனர்.