மாவட்டத்தில் 31 மையங்களில் 11,039 பேர் எழுதுகின்றனர்
கிருஷ்ணகிரி, செப்.27: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நாளை (28ம் தேதி) நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் -2, 2ஏ (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குரூப் 2, 2 ஏ-க்கான கொள்குறி வகை (ஓஎம்ஆர்) தேர்வு நாளை (28-ம் தேதி) நடைபெற உள்ளது. 31 தேர்வு கூடங்களில் நடைபெறும் தேர்வினை 11,039 பேர் எழுத உள்ளனர். தேர்வு பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் நிலையில், 3 பறக்கும் படை அலுவலர்கள், ஒவ்வொரு வட்டத்திலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அலுவலர்கள், 11 நடமாடும் அலகு அலுவலர்கள், 31 ஆய்வு அலுவலர்கள் மற்றும் 31 வீடியோகிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வர்களுக்கு தேர்வுக் கூடங்களில் அடிப்படை வசதிகள், தடையில்லா மின்சாரம் வழங்கவும் மற்றும் சிறப்பு பேருந்து வசதிகள் தொடர்புடைய துறைகள் மூலம் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் அனுமதி சீட்டில் (ஹால் டிக்கெட்) குறிப்பிட்டுள்ளவாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வுக்கூடங்களுக்கு காலை 8.30 மணிக்குள் வரவேண்டும். தாமதமாக வருபவர்களை தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்க இயலாது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய உத்தரவுகளை தேர்வர்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும், என்றார். இக்கூட்டத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தமிழ்நாடு அரசு தேர்வாணைய பிரிவு அலுவலர் ராஜ்குமார், உதவி பிரிவு அலுவலர்கள் கேசவ பெருமாள், சவுந்தரராஜன் உள்ளிட்ட துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.